Tuesday, January 16, 2007

கூட்டீட்டு போனாய்ங்க....

ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தககண்காட்சி பற்றிய பங்காளியின் பதிவைப் படித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவருவதாக தமிழ்வலைபதிவர்கள் நம்புகிறார்களாம்...சமீபத்தில் 1865ல் நானும்,போலிடோண்டுவும்,டோண்டுவும் பீச்சில் சுண்டல் சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் இந்த கருத்தினை உண்மைதான் என ஒருசேர சொன்னபோது என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

ஹி...ஹி....

வழக்கம் போல நேற்று காலையில் தூக்கம் கலைந்து திருதிருவென முழித்துக் கொண்டிருந்த சுபவேளையில் எனது இயக்குனரும், இரண்டு தயாரிப்பாளர்களும்....என்னுடைய இரண்டே இரண்டு தீவிரமான விசிறிகளும்(இன்னும் விவரம் தெரியாததால...ஹி..ஹி), இன்னிக்கு புக்ஃபேர் போறொமென என் திட்டம் தகர்த்தனர்.

தனியாக போய், புத்தகம் வாங்கவரும் அம்மனிகளையும், அவர்கள் வாங்கும் புத்தகங்களையும் மேய்ந்து விட்டு விழிக்குணவில்லாத வேளையில் அறிவுப்பசி தீர்க்கவும்(?)...என் புருசனும் கச்சேரிக்கு போனார்னு வீட்டில் சொல்லிக்கொள்வதற்காக கொஞ்சம் புத்தகங்களையும் வாங்கும் எனது திட்டத்தில் மண் விழுந்தாலும்....அப்பால இன்னொருதபா தனியா போய் கொண்டாடிக்கலாமென தேற்றிக்கொண்டு தயாரிப்பாளர்கள்,இயக்குனர்,விசிறிகள் சூழ படையெடுத்தேன் கண்காட்சிக்கு.....

கண்காட்சி நுழைவாயிலில் பெருங்கூட்டம்........"அஞ்சு ரூவா டிக்கெட்டுல அதிர்ஷ்டம் கொட்டுமென மாங்குமாங்கென பேர்முகவரியெழுதும் இந்த மடையர்கள் உள்ளே போய் எத்தனை புத்தகம் வாங்கி என்ன பிரயொசனம்" என மூத்த தயாரிப்பாளர் டென்சனானார்.இது எனக்கும் சரியெனவே பட்டது.....

நல்ல கூட்டம்....என்னைப் போல அப்பாவிகளும், என் குழுவினரை போல கொடுத்து வைத்தவர்களும் கும்பலாய் வந்திருந்ததை உணர்ந்தேன்.ஆளாளுக்கு ஒரு கடையில் புகுந்து தங்கள் புத்தக தேடலை துவங்க எனக்கு நடுரோட்டில் நிற்கும் ட்ராபிக் கான்ஸ்டபிள் போல மய்யமாய் நின்று கொண்டு ஒவ்வொருவரையும் கண்காணிக்கும் வேலை தரப்பட்டது....'சுயநலக்காரர்கள்' என திட்டிக்கொண்டே கிடைத்த இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள(சைட்...சைட்...ஹி..ஹி) தீர்மானித்தேன்.

பயந்து பயந்து சைட் அடிக்கறது ஒரு பொளப்பா?....நாளைக்கு வந்து தைரியமா அடிச்சுக்கலாம்ல....எங்க போய்டபோகுது....பரந்த உலகம்..நமக்கே சொந்தம்னு...தக்க சமயத்தில் மனசாட்சி மண்டைக்குள் மணியடித்தது.அதற்குள் ஆளாக்கு புத்தகங்களை தேர்ந்தெடுத்தவுடன் என்னை பார்ப்பதும்...நான் ஓடிச்சென்று பில்லுக்கு பணம்கொடுத்து புத்தகங்களை வாங்கிக்கொள்வதும் அநிச்சசையாக நடந்தேறியது.

அவ்வப்போது....வெட்டப்போகும் ஆட்டிற்கு ஆறுதல் சொல்லும் கசாப்புக்கடைக்காரனைப் போல தாங்கள் வாங்கிய புத்தகத்தின் சிறப்பியல்புகளை கூறி இம்சையாக்கினர்....நானும் ஆர்வமாய் கேட்பதாக நடித்தேன்...அவ்வப்போது இயக்குனரும், விசிறிகளும் என்னுடைய தாராளமயமாக்கலை பார்த்து நெகிழ்ந்துபோய் உணர்ச்சிவசப்பட்டார்கள்.அப்போது நிஜமாகவே மனசு சந்தோஷித்தது.சின்ன செலவில் பெரிய சந்தோஷங்கள்....எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ரயில்வே ஸ்டேசன் போர்ட்டரை போலாகியிருந்தேன்....என் குழுவினரோ மனசாட்சியேயில்லாத சேட்டுக்குடும்பம் போல பின்னால் கைவீசி வந்து கொண்டிருந்தனர்.நம்ம தமிழ்நதியின் பதிவில் புத்தகம் தூக்க நாலுபேரை கூட்டி வந்ததாய் கிண்டலடித்தது மனதிற்குள் வந்துபோனது....இங்க நாலு பேர் புத்தகத்தை நான்...ஹி..ஹி...விதி வலியது.

பின்னாலிருந்து ஒரு தேவதை குரல்...."அவர் எவ்ளோ புத்தகம் வாங்கீண்டு போறார் பாருங்கோ"வென....பெருமையாக திரும்பி பார்க்க நினைத்தாலும்....தேவதை குரலில் 60வயது நின்றிருந்தால் மனசு வலிக்குமேயென குரலோடு வந்த அப்பாவிக்கு நேரவிருக்கும் ஆபத்தினை எண்ணிக்கொண்டே மணிமேகலை பிரசுரத்தோடு முற்றுப்புள்ளி வைத்து வெளியே வந்தேன்(தோம்).

மற்றவைகளை...பதிவின் நீளம் கருதியும், என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தமாய் அடுத்த பதிவில் இம்சிக்கிறேன்.

11 Comments:

செந்தழல் ரவி said...

பங்காளி, கலக்கல்...இயல்பாகவே காமெடியில் பிச்சு உதறுகிறீர்...

அடுத்த வெர்ஷனுக்காக காத்திருக்கேன்...

பங்காளி... said...

ரவி,...

உங்க பின்னூட்டத்த பார்த்து ஒரே ஃபீலிங்ஸ் ஆய்ட்டேன்...பின்னே இருக்காதா?

பின்னூட்டமா...அப்படீன்னா என்னன்னு கேக்கற அளவுல இருக்கு நம்ம பதிவுகளோட யோக்கியதை....

ரொம்ப டாங்ஸ் ரவி...

யாருக்காக இல்லாங்காட்டியும் உங்களுக்காய் செகண்ட் ரவுண்டு உண்டு.....

பங்காளி... said...

தயாரிப்பாளர்கள் - அப்பா,அம்மா

இயக்குனர் - மரியாதைக்குறிய மேடம்...ஹி..ஹி..

விசிறிகள் - நம்ம ஜூனியர்ஸ்

முத்துலெட்சுமி said...

//தயாரிப்பாளர்கள் - அப்பா,அம்மா

இயக்குனர் - மரியாதைக்குறிய மேடம்...ஹி..ஹி..

விசிறிகள் - நம்ம ஜூனியர்ஸ் //
நீங்க சொல்லாமலே புரிஞ்சுகிட்டோம்ல.

//நான் ஓடிச்சென்று பில்லுக்கு பணம்கொடுத்து புத்தகங்களை வாங்கிக்கொள்வதும் அநிச்சசையாக நடந்தேறியது.//

அருமையோ அருமை .

இராம் said...

பங்க்ஸ்,

மருத ஸ்டைல் மிஸ்ஸீங்... :(

Dharumi said...

பங்ஸ்,
ம்ம்..ம்ம்..அடுத்த விசிட் 'இயக்குன்ர்' இல்லாம போயிருப்பீங்களே அதப் பத்தி விலாவாரியா எழுதுவீங்கல்ல..?

ராம்ஸ், அது என்ன //மருத ஸ்டைல் மிஸ்ஸீங்... // அப்டின்னு சொல்றீங்க?

பொன்ஸ்~~Poorna said...

இந்த தயாரிப்பாளர் இயக்குனர் மேட்டர் புரியாமத் தான் குழம்பிப் போய்ட்டேன்.

தனிக்காட்டு ராசாவா போய் வந்து என்னாச்சுன்னு சொல்லுங்கப்போவ் :)

பங்காளி... said...

வாங்க லக்ஷ்மி...நம்ம ஏரியாவுக்குள்ள முதல் தடவையா வந்திருக்கீக....வாங்க..வாங்க

பங்காளி... said...

ஆகா ராம் நம்ம வீச்ச விட்டுட்டேனா....விடுங்க இனி சரியா புடிச்சி கம்பா போயிட்டா போச்சு.....என்ன நாஞ் சொல்றது

பங்காளி... said...

தருமி, பொன்ஸ்...

உங்க ஆசயை கெடுப்பேனா, விரைவில் சாமி தனியா வேட்டைக்கு போன செய்திகளுடன்....ஹி..ஹி..

Abul said...

///"அஞ்சு ரூவா டிக்கெட்டுல அதிர்ஷ்டம் கொட்டுமென மாங்குமாங்கென பேர்முகவரியெழுதும் இந்த மடையர்கள் உள்ளே போய் எத்தனை புத்தகம் வாங்கி என்ன பிரயொசனம்" என மூத்த தயாரிப்பாளர் டென்சனானார்.இது எனக்கும் சரியெனவே பட்டது..... ///

அப்படி இல்லை பங்காளி..
விமானச்சீட்டுக்காக அன்றி
புத்தகங்கள் பரிசாகக் கிடைப்பதற்காகவும் பெயர் முகவரி எழுதியிருக்கலாமே..
-‍அபுல்