Monday, March 26, 2007

கடவுள் பாதி...மிருகம் மீதி.....

மக்களே மொதல்லயே சொல்லீர்றேன், இதுக்கெல்லாம் முழுக்காரணம் நம்ம மங்கைதான். இத படிச்சிட்டு நீங்கள் அடையப்போகும் எரிச்சல், மன உளைச்சல்...இத்யாதி இத்யாதிகளுக்கெல்லாம் அவர்தான் காரணம்....

(பின்னே நமக்குள்ள தூங்கீட்டு இருந்த மிருகத்த எழுப்பி விட்டதுக்கான பலனை அம்மனி அனுபவிக்க வேனாமா...ஹி..ஹி...)

ஓக்கே...ஸ்டார்ட் ம்மீசிக்....

முதல்ல உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை...

மெய்யாலுமே நான் கடவுள், நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும், என்ன பண்றது அதான் உண்மை.உங்களுக்கு சந்தேகமிருந்தா சோதித்து பாருங்கள்.....என்னை நம்புகிறவர்களுக்கு அடுத்த மூன்று நாட்களில் நல்ல சேதியொன்று வரும்...நம்பாதவர்களுக்கு.....ஹேய் நம்புங்கப்பா....

அடுத்து....

நான் ரொம்ப மோசமான, மூர்க்கமான காமுகன்...ஹி..ஹி...டென்சனாவாதீங்கோ...ஒரு எழுத்து மிஸ்ஸிங்...இப்ப நல்லா படிங்க..."கார்முகன்". அதென்னவோ கார்னா அப்படி ஒரு கொலவெறி...பன்னெண்டு வயசுல மொதமொதலா ஸ்டீயரிங் பிடிச்சி அப்பாகிட்ட தர்ம அடி வாங்கி...இப்ப இருவத்தி அஞ்சு வருசமாச்சி.....இன்னும் தீரலை.இன்னிக்கு மார்கெட்ல நான் ஓட்டாத காரே இல்லைன்னு சொல்லலாம்.அத்தனையும் வாங்கி ஓட்டியாச்சி...கொளுப்பெடுத்த பயபுள்ளன்னு தோணுதா....ஹி..ஹி..., வீட்லயும் திட்டிப்பார்த்துட்டு தண்ணி தெளிச்சி விட்டுட்டாக....ஹி..ஹி...இப்ப எத்தன வண்டி வச்சிருக்கேனு சொன்னா பீத்திக்கிற மாதிரி இருக்கும்,அதுனால வேணாம்...ஹி..ஹி...

எப்போதும் என்னை ஒரு முட்டாளாக காட்டிக்கொள்வதையே விரும்புகிறேன்...அதில் நிறைய சாதகங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறேன்.....ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்....புத்திசாலியாக யார்வேண்டுமானாலும் நடிக்கலாம்...முட்டாளாய் நடிப்பது ரொம்பவே கஷ்டம்.

அப்பால...நாம யாருக்காச்சும் ஹெல்ப் பண்ணினா அவங்கள தனியா கூப்டு மெரட்டீருவேன்..ஹி..ஹி....அதாவது "மவனே...நான் பண்ண இந்த ஹெல்ப் உணக்கும் எனக்கும் மட்டுந்தான் தெரியனும்...வேற யாருக்காச்சும் தெரிஞ்சது தொலச்சிருவேன்னு"....ஹி..ஹி.யாருக்கும் தெரியாம ஹெல்ப் பண்ணீட்டு ஒன்னுந்தெரியாத மாதிரி சமத்தா இருக்கறதுதான் பிடிச்சிருக்கு.

ஒரு காலத்தில் நண்பர்கள்தான் வாழ்க்கையாக இருந்தது....இன்றைக்கு தனிமையையே விரும்புகிறேன்....கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் குடும்பத்துடன் செலவழிக்கவே விரும்புகிறேன்.இன்றைக்கு அநேகமாய் எல்லா நண்பர்களையும் தவிர்த்துவிடுகிறேன்....புதிய நண்பர்களை பெறுவதிலும் நாட்டமில்லை.

ஹி..ஹி...சென்னையில் ஒரு மிகபிரபலமான ஜோசிய அம்மனி என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உன் வாழ்க்கையில் குறைந்தது பத்து பெண்களாவது வந்துபோவார்கள், உஷார் என இன்ப அதிர்ச்சி கொடுத்தார்...ஹி..ஹி...வீட்ல அம்மனிகிட்டே இன்னும் ஒன்பது பேர் வருவாங்க போல ஜாக்கரதையா பாத்துக்கன்னு சொல்லிருக்கேன் ...ஹி..ஹி...அம்மனியோ...அம்மா,தங்கை, பொன்னு, அத்தைனு...பத்து பேர் கணக்கு சொல்லி எல்லாம் வந்துட்டாங்க...அதுனால கைய காலவச்சிட்டு ஒழுங்கா இருக்கனும்னு மிரட்டிருக்காங்க...ஹி..ஹி...

ஒன்னுக்கொண்னு சம்பந்தமேயில்லாத வெவ்வேறு துறைசார்ந்த நான்கு தொழில் நிறுவனங்கள், அவற்றின் இலக்குகள்,ஆட்கள்,போட்டிகள், பிரச்சினைகள், லாபம், நஷ்டம்...என விரட்டும் அழுத்தங்கள்...காலை 7.30துவங்கும் நாள் முடிவடையும்போது நள்ளிரவு 12 ஐ தாண்டுகிறது....5 முதல் 6 மணி நேரமே தூக்கம்...தினம் சென்னை ட்ராஃபிக்கில் குறைந்தது 100 கிலோமீட்டராவது ட்ரைவ் செய்யும் பொறுமை.இத்தனைக்கும் நடுவில் சுற்றுபுறத்தை ரசிக்க,கோவிக்க,விமர்சிக்க முடிதல்......

என்னுடைய தொழில்முறை எதிரிகளை மிகவும் மதிப்பவன்.....அதனால்தான் என்னவோ.....என்னுடைய மோசமான எதிரிகள் கூட என்னை நேருக்குநேர் பார்க்க அமையும் சந்தர்ப்பத்தில் பகையை ஒதுக்கிவைத்து சினேகமாய் பேசுகிறார்கள்.....தொழிலை தவிர்த்து மற்ற விசயங்களை மனம்விட்டு பேசும் எதிரிகளும் உண்டு.இது குறித்து தனியே ஒரு பதிவே போடலாம் அத்தனை ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் உண்டு.

இந்தியா ஒரு அதியற்புதமான Legspinner ஐ இழந்துவிட்டது....மெய்யாலுமே மக்கா.....உலகத்தரம் வாய்ந்த, ஏன் அதை விட அருமையான சுழல்பந்து வீச்சாளன் நான்.

இப்படி நெறய சொல்லீட்டு போகலாம்....இப்பவே உங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்கு....அதுனால இத்தோட முடிச்சிக்கறேன்.

"சும்மா கெடந்த பயல கிண்டிவிட்டு இப்ப ஆட்டம் தாங்கலியேன்னு தோணுதா மங்கை!......நாந்தான் அப்பவே சொன்னேன்ல நான் இந்த வெள்ளாட்டுக்கு வரலைன்னு...இப்ப அனுபவிங்க....ஹி..ஹி..."

Thursday, March 22, 2007

ஸென் - என்ன சொல்கிறது.

ஸென் - ஒரு எளிய அறிமுகம்




"நெஞ்சுக்குள் நேரடியாக உள் புகுவதே என் தத்துவம்"

...இப்படித்தான் போதிதர்மா ஸென் பற்றி குறிப்பிடுகிறார்.

திரு.ருத்ரன் அவர்கள் தனது நூலில் இதை இன்னும் எளிமையாய் ஸென்னை விளக்குகிறார்....

ஸென் என்பதை நிலாவை காட்டும் விரல் என்றும் குறிப்பிடுவதுண்டு.ஸென் என்பது அனுபவம்..அதை விளக்க மூயலும் கதைகள்,விடுகதைகள்,கவிதைகள் ஆகியவையே அந்த சுட்டும் விரல்கள். விரலைப் பார்த்தால் நிலா தெரியாது. நிலாவை பார்த்தபின் விரல் தேவைப்படாது.நிலாவை தேடுபவன் முதலில் விரலைப் பார்த்து அது காட்டும் நிலாவை பார்க்க முடியும்.ஸென் விளக்கப்படுவதை விட உணரப்படவேண்டியது......


நான் உணர்ந்த வரையில் ஸென் என்பது சிக்கலில்லாத ஆன்மீகம். குறுக்கீடுகள் இல்லாத அனுபவமென்றும் கூறலாம். பொதுவில் ஸென் ஒரு மதமேயில்லை,அது ஒரு வாழ்கைமுறை...அனுபவித்து உணரவேண்டிய வாழ்வியல் தத்துவம். இங்கே கடவுள் இல்லை,சடங்குகளோ சம்பிரதாயங்களோ இல்லை.

இன்னும் சொல்வதென்றால், வாழ்க்கைக்காக காத்திருக்கும் மனிதனிடம்..... காத்திருக்கும் வாழ்க்கையை உணர்த்தி அனுபவிக்க சொல்லும் சூத்திரம்

ஸென் தத்துவத்தினை ஒரு வாழ்க்கை முறையாக்க் உலகெங்கும் அறிமுகம் செய்த பெருமை திரு.சுஸுகி என்பாரையே சேரும்.கியோட்டோ பல்கலை கழகத்தின் புத்தமத தத்துவ பேராசிரியரான இவர் பலமொழிகளில் பரிச்சியம் உள்ளவர்.ஸென் பற்றி இவர் எழுதிய 25க்கும் மேற்பட்ட புத்தகங்களும் க்ட்டுரைகளும்தான் ஆங்கில உலகத்திற்கு ஸென்னை அறிமுகப்படுத்தியது.ஆங்கில வழிதான் ஸென் உலகெங்கும் பரவியது, நம் தமிழுக்கும் அப்படியே....

இவர் தவிர திரு.அலன் வாட்ஸ் மற்றும் திரு.பௌல் ரெப்ஃ ஆகியோரும் ஸென் பற்றி அருமையான புத்தகங்களை எழுதியுள்ளனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் செக்ஸ் சாமியார் என அவதூறு பரப்பப்பட்ட ரஜனீஷ் என்கிற ஓஷோ தனது உரைகளில் ஸென் தத்துவத்தை பரப்பினார். அவரது உரைகளை கொண்டு மட்டுமே ஸென் தொடர்பாய் 700க்கும் மேலான நூல்கள் வெளியாகியுள்ளன. ஓஷோ எழுதிய 'போதிதர்மா' என்கிற நூலில் போதிதர்மா பற்றிய பல சுவையாக கதைகள் உள்ளன.

அடுத்த பாகத்தில் ஸென் பற்றி மேலதிக தகவல்களுடன் தொடர்கிறேன்.....

ஸென் - ஒரு எளிய அறிமுகம்

ஸென்...இதன் நேரடி அர்த்தம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. இந்த வார்த்தையும் அது தாங்கிப்பிடிக்கும் தத்துவமும், அதன் பின்புலமும், மஹோதன்னமும் எத்தனை பேருக்கு தெரியும்?....

இந்த பதிவு அதெல்லாம் தெரியாத நண்பர்களுக்காகவே....

புத்த மதத்தின் இரு பிரிவுகளில் ஒன்றான மஹாயான புத்தமதத்தின் ஒரு வகைதான் இந்த் ஸென். சீனாவில் தோன்றிய இந்த பிரிவை தோற்றுவித்தவன் ஒரு தமிழன் என்பது ஆச்சர்யமான அதே நேரத்தில் அதிகம் வெளியில் தெரியாத உண்மை.

'போதிதர்மா' என்கிற மாமனிதன் தந்த கொடைதான் இந்த ஸென். ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னர், பல்லவ அரனொருவனின் மூன்றாவது மகனாக பிறந்தவர்தான் இந்த போதிதர்மா.பௌத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அரசபோகங்களை உதறி புத்தரின் கொள்கைகளை பின்பற்ற துவங்கிய போதிதர்மாவின் குரு ஒரு பெண்மணி என்பதும் ஆச்சர்யமான விடயம்.

'பிரக்யதாரா' என்கிற பெண்மணிதான் போதிதர்மாவின் குரு. குருகுல வாசம் முடித்த அவரை அவரின் குரு சீனாவுக்கு செல்லுமாறு பணித்தாக தெரிகிறது.அதற்கு சுவையான ஓரு காரணமும் சொல்லப்படுகிறது.

அந்த காலகட்டத்தில்தான் சீனா கன்ஃப்யூஷியசின் தத்துவங்களில் இருந்து மெல்ல புத்தரின் போதனைகளை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது எனவும்,புத்தரின் எண்ணங்களை தேர்ந்த ஒரு மெய்ஞானியால் மட்டுமே பிரதிபலிக்க முடியும் என்றே அவர் சீனாவுக்கு செல்ல பணிக்கப்பட்டார் என்கிற கதையும் உண்டு.

சீனாவில் ஒன்பது ஆண்டுகள் போதனைக்குப் பிறகு தனது நான்கு சீடர்களை அழைத்து தனது கேள்விக்கு சரியான பதிலை தருபவரை தனது வாரிசாக நியமிப்பதாகவும்,அவருக்கே தன்னையும் தனது ஞானத்தையும் தருவதாக கூறினாராம்.

அவரின் மௌன கேள்விக்கு முதலாவது சீடன் "மௌனமே எல்லாவற்றையும் ஆரம்பிக்கும்" என்றானாம். போதிதர்மா அவனிடம் 'உனக்கு என்னுடைய தோல்' என்றார்.இரண்டாவது சீடன் "நானில்லை ஆனால் இருக்கிறேன், இருப்பதால்" என்றவனிடம் 'என் சதை' என்றாராம்.

மூண்றாமவன் "சொல்லமுடியாது" என்றதற்கு 'உனக்கு என் எலும்புகள் சொந்தம்' என்று கூற, நான்காவது சீடன் அவரை மௌனமாக வணங்கினான். அவனுக்கே தனது ஆன்மா சொந்தம் என கூறி அவனையே தனது வாரிசாக நியமித்தார் என்று சொல்லப்படுகிறது. அவர்தான் இரண்டாவது ஸென் குரு என அறியப்படும் 'ஹீகோ'(Huike).

தோலும் எலும்பு சதையும் மட்டுமே போதாது, ஆன்மாதான் நிரந்தரம் என்பதை உணர்த்தவே இந்த வாரிசு தேர்வு கதை சொல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. போதிதர்மா அவரது சீடர்களாலேயே கொல்லப்பட்டதாகவும், ஆனால் அதற்கு மூன்றாண்டுகள் கழித்து அவர் இமயத்தின் பனிமுகடுகளி அவரை பலர் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

ஸென் என்பது மாபெரும் ஆன்ம ஞானம்...ஸென் என்பதற்கான அர்த்தத்தையும் அது தரும் அனுபவத்தினையும் அடுத்து வரும் பதிவில் தொடர்கிறேன்.

Monday, March 19, 2007

Sir Bob Woolmer(1948-2007)



சர்வதேச கிரிக்கெட் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது சர்.பாப் ஊல்மரின் அகால மரணம். அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், இத் துயரத்தினை தாங்கும் தேவையான மன உறுதியினை தருமாறு எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

அயர்லாந்திற்கெதிரான அதிர்ச்சி தோல்வி தந்த மன உளைச்சலே அவரை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றிருக்கும் என கூறப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களாய் ஊடகங்களும், பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களும் வாய்க்கு வந்தபடி அவரை மட்டு மரியாதையில்லால் திட்டி தீர்த்தவர்கள் இனி அவரை வாயார புகழ்வார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்....வாழும் காலத்தில் மதிக்கப்படாமல் போவதை விட பெரிய கொடுமை ஏதுமில்லை.

இந்தியத் தாயின் மடியில் பிறந்த எண்ணற்ற தவப்புதல்வர்களில் பாப் வூல்மரும் ஒருவர் என்பதை இந்த கணத்தில் ஒரு இந்தியனாக பெருமையுடன் எண்ணிப்பார்கிறேன்.

அண்ணாரின் வாழ்வையும், அவரது சிறப்புகளையும் அவரது இந்த தளத்தில் சென்று பார்க்கலாம்.

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

துயரத்துடன்...

பங்காளி...

Thursday, March 01, 2007

Google Earth படங்காட்றாங்க.....

Google Earth...ல எடுத்த படங்களாம் இவை.....வேறு யாரும் இதுமாதிரி படங்களை எடுத்திருந்தால்....பகிர்ந்து கொள்ளலாமே......
Everest



Dolphin



Basra



BarrierReef



Pyramids



Profanity




Plane UK



Palm



Hollywood





U-boat



Topless



Teotihuacan



coronado military base



Wolf creek meterit



Versaille

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு....

அன்புடையீர்...

சமீபத்தில் தமிழ்மணம் பின்னூட்ட உயரெல்லையை 30 ஆக நிர்ணயித்திருப்பது பற்றிய அறிவிப்பினை வரவேற்கிறேன். நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவாகவே தோன்றுகிறது.

இதே வகையில் பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தாத பதிவர்களின் பின்னூட்டங்களும் முகப்பில் திரட்டப்படுவது அவசியமென்று நினைக்கிறேன். தற்சமயம் அநேகமாய் எல்லா பதிவர்களும் விரும்பியே மட்டுறுத்தலை செய்துகொண்ட பின்னர்....மட்டுறுத்தலில் உடன்பாடில்லாத என்போன்ற வெகுசில பதிவர்களே பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தாதிருக்கின்றனர்.

தங்களுக்கு பாதிப்பு வருமென நினைத்த பதிவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்ட பின்னர் மற்றவர்களை ஒதுக்கிவைப்பதில் நியாயமில்லை என்றே படுகிறது. இது எனது கோரிக்கை....சாதக பாதகங்களை பரிசீலிப்பீர்கள்....நல்ல முடிவெடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்.....