Friday, February 02, 2007

சாய் அற்புதமா?

மோதிரம் கொடுத்தார், விபூதி கொடுத்தார், வாட்ச் கொடுத்தார்...ஏண்டா இது வரை ஒரு பூசணிக்கா தரல. எல்லாம் கைக்குள்ள அடங்கற மாதிரி பொருளாவே தர்றார். அவர் கொடுத்த சீக்கோ வாட்ச்ல கம்பெனியோட சீரியல் நம்பர்லாம் வருதே எப்படி?.இந்த அஜால்குஜால் வேலையெல்லாம் வீடியோவுல நல்லா தெரியுது பார்....இந்த பிரச்சாரங்கள் அவருக்கெதிராய் ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்பதுதானே உண்மை.

இந்த நாட்டில், நான் கூட என்னை கடவுளாக அறிவித்துக்கொள்ள உரிமை இருக்கிறது, அதை ஸ்திரப்படுத்த அத்தனை வகை வியாபார உத்திகளையும் செயல்படுத்தி,எதிர்வரும் சவால்களை ஊதித்தள்ளி என்னை கடவுளென நம்பவைக்கும் ஆளுமையும் இருக்கிறது. முடிந்தால் என்னை தோலுறித்து காட்டுங்கள்...அறுபத்தி நாலு வருடமாய் அதற்காய் ஆக்கபூர்வமாய் என்ன செய்திருக்கிறீர்கள்....நான் அயோக்கியன் என தெரிந்தும் என் தந்திரத்திற்கு முன்னால் நிற்கமுடியாது தெருவில் நின்று உளையிடுவதைத் தவிர வேறு எதை சாதித்திருக்கிறீர்கள்?. நாளின் முடிவில்(End of the Day) நான் கடவுளாக உறுதிப்படுவதும்...நீங்கள் ஊளையிடுவதாய் நிற்பதும்தானே நிஜம்.

அவர் கடவுள்தான் என அவரது பக்தர்களைவிட இந்த விமர்சகர்கள் நம்பினர் என்பேன்.ஆசாபாசங்கள் நிறைந்த சாதுர்யமான சாமானியன்தான் சத்யசாய் என்பதை அவர்கள் உணர மறுத்தார்கள் என்பதே எனது குற்றச்சாட்டு....கடவுள் இல்லையென நிரூபிக்க பாடுபட்ட இவர்கள் இவர் சாமானியனே என உணர்த்த பாடுபட்டிருக்க வேண்டும்.இன்னும் சொல்லப்போனால் காலத்தின் துனையோடு அவர் ஜெயித்துவிட்டதாகவே நினைக்கிறேன்.தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாது இன்னமும் புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

இனி கொஞ்சம் வேறு பாதையில் சிந்திப்போமா.....

அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் வாழ்வில் உறவுகள் தேவைப்படுகிறது.
கடவுளையும் மனிதனையும் இனைக்கும் உறவை என்னவென்போம்...பக்தி எனலாமா?....பொதுவில் உறவுகள் என்பது ஒருவகையான இளைப்பாறும் மனப்பான்மை,கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு என்பது சௌகரியமான பொய், அவசியமான உண்மை.உதவும் பொய்களுக்கும் தேவையான உண்மைகளுக்கும் இடையே இருப்பதுதான் வாழ்க்கை.

இந்த உறவின் நிழழே போதுமென்றால் அதிலேயே தங்கிவிடலாம். அது தற்காலிக தேவைதான் என்று தெரிந்தால் - வாழ்வின் பாதையை தொடரலாம். உண்மைகளைத்தான் தொடரவேண்டுமில்லை.பொய்களையும் தொடரலாம். உண்மை நிஜத்தின் தரை, நடக்கத்தான் முடியும்..ஆனால் பொய் ஒரு கனவின் விஸ்தாரம் -பறக்கவும் முடியுமெனும் ஆசையை நம்பிக்கையாக்கும் அரிதாரத்தின் ஆதாராம்..இதுதான் பக்தி என்பதை உணரத் தலைப்படவேண்டும்.

இந்த உறவினால் எதெல்லாம் சாத்தியமாகிறது....

*உள்ள குமைச்சலையும், குமுறலையும் பயமின்றி பரப்பி வைக்க ஒரு தளம்
*தன்னை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதால் உள்ளுக்குள் உணரும் சுயமரியாதை
*தன் சக்திக்கு மீறிய காரியங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும் உதவி
.....இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

ம்ம்ம்ம்ம்.....எத்ற்காக இத்தனையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். சலிப்புதான் வருகிறது, யாருக்கும் தெரியாததை எழுதவில்லை, எனவே இந்த பதிவினை இந்த அளவில் முடித்துக்கொள்வதுதான் நம் இருவருக்குமே நல்லது....

எனது அனுபவத்தில் அற்புதமாக தோன்றிய இரண்டு நிகழ்வுகளை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த பதிவில் உள்ள சில வரிகள் ருத்ரனிடமிருந்து திருடப்பட்டவை(அனுமதியில்லாது எடுத்தால் அதன் பேர் திருட்டுத்தானே !)

2 Comments:

செந்தழல் ரவி said...

கமண்ட் மாடரேஷன் போட்டாச்சா ?

மங்கை said...

//உள்ள குமைச்சலையும், குமுறலையும் பயமின்றி பரப்பி வைக்க ஒரு தளம்
*தன்னை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதால் உள்ளுக்குள் உணரும் சுயமரியாதை
*தன் சக்திக்கு மீறிய காரியங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும் உதவி//

எந்த ஒரு நம்பிக்கையையும் விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது...அதில் விருப்பமும் இல்லை...
எனக்கு இருக்கும் சில நம்பிக்கைகள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது...மனதிற்கு இதம் அளிக்கும் எந்த ஒரு சக்தியையும் ஏற்றுக்கொள்வது எனக்கு எளிதான ஒன்று (அது எத்தகைய விமர்சனங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலும்)

இந்தப் பதிவில் சில கருத்துக்கள் அந்த நம்பிக்கையை பலப்படுத்துவதாக இருக்கிறது..நன்றி...