Tuesday, September 04, 2007

கிருஷ்ணர் சில கேள்விகளும் குழப்பங்களும்


இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி....ஆளாளுக்கு கண்ணன் துதிபாடி பதிவிடும் நேரத்தில் கிருஷ்ணர் பற்றிய நானறிந்த சில தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தொகுக்கவே இந்த பதிவு

கண்ணன் அடிப்படையில் ஒரு தமிழனாகவே/திராவிடனாக இருந்திருக்க வேண்டுமென்பது என்னுடைய அனுமானம் இதனை நிரூபிக்க என்னிடம் போதிய சான்றாவனங்கள் இல்லாவிடினும் நம்முடைய கருப்பண்ண சாமியும் கண்ணனும் ஒருவராக இருக்க வாய்ப்புள்தை அலசும் புத்தகமொன்றை படித்திருக்கிறேன்.....புத்தகத்தின் பெயர் நினைவில்லை

எனது இதே கருத்தினையொட்டி திரு.குமரி மைந்தன் அவர்கள் தனது பதிவொன்றில் கிருஷ்ணரை குறித்து பின்வருமாறு பதிகிறார்....

துவரைக் கோமான் என்பவன் இடைக் கழகத்தவன். கார்க்கி கூறுவது தவறு. துவார் என்றால் கதவு. கபாடம் என்றாலும் கதவு. கபாடபுரம் தான் துவாரகை →துவரை. தெற்கே கடலினுள் அமிழ்ந்த நிலத்துக்குத் துவரையம்பதி என்ற பெயர் உண்டு என்ற மரபு குமரி மாவட்டத்தில் உருவான அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலில் பதிவாகியுள்ளது. அய்யா ஒளி என்ற இதழில் நான் எழுதியுள்ள “துவரையம்பதி” என்ற கட்டுரை பார்க்க. கபாடபுரம் அழிந்த பின் அங்கிருந்து குசராத்துக் கரையில் குடியேறியவர்கள் தங்கள் நகரத்துக்குத் துவாரகை என்று பெயரிட்டனர்.

மகாபாரதம், மதுரை (மாத்ரா = மா + துறை → மாதுறை → மதுரை)யில் ஆண்ட கண்ணனை சிசுபாலன் என்ற நாக அரசன் துரத்த அவன் துவாரகையில் குடியேறியதாகக் கூறுகிறது. இதைக் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த மதுரை → கபாடபுரம் இடப்பெயர்ச்சியை நினைவுகூரும் கதைக் கருவாகக் கொள்ளலாம்.

மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன் (பார்க்க: Charists of Gods). காண்டவனத்தை (கோண்ட்வானா – காண்டவனம்; இன்று இந்தியாவில் கோண்டு எனும் மக்கள் வாழும் பகுதியின் பெயர். கோண்டுவானா நிலம் என்று கண்டப்பெயர்ச்சிக்கு முன் தென் அரைக் கோளத்தில் அனைத்து நிலப்பரப்பும் திரண்டிருந்த நிலைக்கு ஏன் புவியியங்கியலாளர் பெயர் கொடுத்தனர்?) எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம்.

நூற்றுவரும் சேரர்களின் முன்னோர் என்று பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரிஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடல் மூலம் தெரிய வருகிறது.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
(புறம் 1:13-16)


இதன் பொருள் ஐவரைப் பகைத்து போர்க்களத்தில் இறந்த நூற்றுவர்க்கும் சேரலாதன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பதாகும்.

மகாபாரதம் கலுழன் சருக்கத்தில் பாம்புகளுக்கும் பருந்துகளுக்கும் உள்ள பகைமை கூறப்பட்டுள்ளது. காண்டவனத்தைக் கண்ணணும் அருச்சுனனும் தீவைத்ததே நாகங்களை (நாகர்களை)க் கொல்லத்தான்.

போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ?

முரிஞ்சியூர் முடி நாகராயர் ஓர் நாகர் என்பது அவர் பெயரிலிருந்து தெரிகிறது. அவர் இரண்டாம் கழகத்தில் துவரையை ஆண்ட கண்ணனின் பிற்காலத்தவராக இருக்க வேண்டும்.


இந்த கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் திரு.கே.டி.சேத்னா என்பார் கிருஷ்ணர் பங்கேற்றதாய் கருதப்படும் மஹாபாரத போரின் காலத்தினை வானியல் தகவல்களை வைத்து கணித்திருக்கிறார். அதாவது கி.மு 3128ல் இந்த போர் நடந்திருக்க வேண்டும் என்கிறார்.

இதை உறுதி செய்யும் வகையில் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு செப்பு தகடு தரும் செய்தியாவது கி.மு 3012ல் அர்ஜுனனின் பேரனான ஜனமேஜயன் என்பான் துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ராமர் கோவில் ஒன்றிற்கு நிலமானியம் வழங்கிதாக கூறுகிறது. இந்த செப்பேடு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாய்"இந்தியன் ஆண்டிகுவெரி"யில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதைத் தவிர கிருஷ்ணரில் லீலா விநோதங்கள் எண்ணிலடங்கா...அவற்றை விவரிக்கப் போனால் விரசத்தில் எல்லையை தொடுமென்பதால்...மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் வைக்கிறேன்....அதாவது கண்ணனின் காதலியாக கருதப்படும் ராதை உண்மையில் அவருக்கு அத்தை முறையானவள் என்பதும் மாற்றான் மனைவி என்பதும் நெருடும் தகவல்கள்.


மேலே உள்ளது கிருஷ்ணரின் ஜாதகம் என திரு.அருன் பன்சால் என்பவர் கணித்திருக்கிறார்.அவரின் கணிப்பின் படி கிருஷ்னர் கி.மு.3228 ல் ஜூலை மாதம் 21ம் நாள் பிறந்ததாக கூறுகிறார். இது குறித்த மேலதிக விவரங்கள் இங்கே...

எது எப்படியாகினும் பகவத்கீதை போன்ற காலத்திற்கு நிலைத்து நிற்கும் தத்துவத்தை அளித்துச் சென்ற கிருஷணரை அவர் பிறந்த இந்த நாளில் மாற்றாரோடு இனைந்து நாமும் வாழ்த்துவோம்.....

18 Comments:

துளசி கோபால் said...

புது விவரங்களுக்கு நன்றி.

பங்காளி... said...

துளசி...

வருகைக்கு நன்றி தாயே....

கிருஷ்ணரின் ஜாதகம் மற்றும் பிறந்த தேதி குறித்தான தகவல்களை இப்போது சேர்த்திருக்கிறேன்....பார்த்துட்டு சொல்லுங்க....

மங்கை said...

பெரிய ஆராய்ச்சியே பண்ணியிருகீங்க இவ்வளவும் படிச்சீங்களா...

மணியன் said...

இன்று பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன், நன்றி !

பங்காளி... said...

மங்கை...

ர்ர்ரொம்ப முன்னால படிச்சது....நேத்து தேடினப்பொ அந்த குறிப்பெல்லாம் கிடைச்சது...அதான் போட்டுத் தாக்கிட்டேன்....

மெளலி (மதுரையம்பதி) said...

//துவரையம்பதி//

என்னை வைத்துக் காமடி ஒண்ணும் பண்ணல்லையே?.

அறிய தகவல்கள்...கிருஷ்ணரின் ஜாதகம்-காலம் பற்றிய கட்டுரையை நான் படித்திருக்கிறேன்.....

வல்லிசிம்ஹன் said...

Mikuntha NanRi PangaaLi.
sorry to comment in thanglish.

Araaycchi ivvaLavu tholaivukkup pokiRathaa.
viyakka vaikkum thakavalkaL.

KaNNan paRRiyum KaruppaNNasaami paRRiyum seythi ariyathu.
uNmaiyaakave vivaranggaL nanRAka
uLLathu.
MeeNdum nanRi.

Geetha Sambasivam said...

கண்ணன் திராவிடக் கடவுள் என்பதும், கிருஷ்ணனின் ஜாதகக் குறிப்பும், அர்ச்சுனன் எப்படி பாண்டிய இளவரசியான அல்லியை மணந்தான் என்பது பற்றியும், மகாபாரதம் தென் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் சாத்தியம் உண்டு எனவும் நானும் படிச்சேன், இவ்வளவு விவரமாய் இல்லை என்றாலும், இம்மாதிரியான ஒரு கருத்து உண்டு என்பது வரை அறிந்திருக்கிறேன். ராசக்கிரீடை பற்றி மேலோட்டமாய்ப் படித்தால் கட்டாயம் நெருடும். உள்ளார்ந்த அர்த்தம் வேறே என்பார்கள் பெரியோர்கள்.

பங்காளி... said...

மதுரையம்பதி...

வாங்க...மொத தடவையா நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க...

வல்லி சிம்ஹன், கீதா...

பெரியவங்க எல்லாம் நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க, ரொம்ப சந்தோஷம்....

கிருஷ்ணர் குறித்து இன்னும் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கு....சமயம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்கிறேன்.

maruthan said...

ராதாகிருஷ்ணன் குறித்த தகவல் டாப்

பங்காளி... said...

வாங்க கார்த்திக்...

இந்த ராதாகிருஷ்ணன் மேட்டர் பலருக்கு தெரியாது...அல்லது மறைக்கப் பட்டது என்று கூட சொல்லாம்.

இன்றைக்கு நெருடும் பல விதயங்கள் அன்றைக்கு பழக்கத்தில் இருந்திருக்கின்றன....

Hariharan # 03985177737685368452 said...

பங்காளி,

தமிழகத்தின் , தமிழரின் பாரம்பரியக் கடவுள் என்பதை கருப்பண்ணசாமிக் கடவுளே பகவான் கிருஷ்ணன் கண்ணன் என்று ஆக்கப்பட்டதாக ஆய்வு செய்வதை சரியே என்று ஏற்கும் பட்சத்தில் தமிழகத்தின் கருப்பண்ண சாமிக்கடவுள் பகவத் கீதையை சமஸ்கிருதத்தில் அருளியிருக்கிறார் என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

ஆக சமஸ்கிருதம் தமிழரின் பாரம்பரியமொழியே என்பது கருப்பண்ணசாமி கிருஷ்ணனாக ஆகிய ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்த ஆய்வினால் பகவான் கிருஷ்ணன் எனப்படும் கருப்பண்ணசாமி நடத்திய ராசலீலை பாலியல் வக்கிரம் நிறைந்து ஆபாசமானது என்றாகிறது.

மேலும் ராதா கிருஷ்ணர் என்றாக்கப்பட்ட தமிழகத்துக்கடவுள் கருப்பண்ணசாமி அத்தை எனும் உறவுமுறையிலான ராதையை மணந்தவர் எனும் உண்மை மறைக்கப்பட்டதையும் இந்த ஆய்வாளர் திரு. குமரி மைந்தன் ஆய்வு வெளிப்படுத்துகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? :-))

கிருஷ்ணரின் / கருப்பண்ணசாமியின் :-)) ராசலீலை என்பது எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய தளம் உடலளவில் என்றால் கொச்சையான பாலியல் குளறுபடிகளே தென்படும்.

ஆன்மீகத்தில் படிப்படியான ஞானம் பெற்றுத் தெளிந்தபின் உயர்தளத்தில் ஆன்மீக தத்துவ விசாரங்களை அணுகும் மனோநிலையில் உணரவேண்டிய விஷயம் ராசலீலை.

ஆன்மீக அனலடிக்கல் பார்வை அடிப்படைத்தேவை ராசலீலையை அதன் மெய்யான விதத்தில் கண்டுணர.

Hariharan # 03985177737685368452 said...

ஆன்மீகத்தில் படிப்படியான ஞானம் பெற்றுத் தெளிந்தபின் உயர்தளத்தில் ஆன்மீக தத்துவ விசாரங்களை அணுகும் மனோநிலையில் உணரவேண்டிய விஷயம் ராசலீலை.

ஆன்மீக அனலடிக்கல் பார்வை அடிப்படைத்தேவை ராசலீலையை அதன் மெய்யான விதத்தில் கண்டுணர.

அரிசி, கோதுமை, கத்தரிக்காய், நெய், பருப்பு, பால்

இவை உடல் -Gross என்பதை மட்டும் உணரும் கான்சியஸ்னஸ் மட்டுமே கொண்டு பார்த்தால் உணவுப் பொருட்கள்....

இவையே பஞ்சீகரணம் என்று மாறுதல்களுக்கு உட்பட்டு சதையாக, கண், கை, கால் இதர உறுப்புக்களாக உருமாறுகின்றன. பருப்பு டூ உறுப்பு-உடல் பஞ்சீகரணம் :-))

ஆக பருப்பு = உடல் gross Matter

ஆனால் உணவு, உறுப்பு என்கிற பகுப்பு இல்லாமல் சகலஜீவன்கள் அனைத்தையும் உள்ளிருந்து இயக்குவது ஆணுமில்லாத, பெண்ணுமில்லாத
Subtle ஆத்மா எனும் இறைத்துகள்.

ஆன்மீக விசாரங்கள் செய்து, பற்று அற்று ஆத்ம தரிசனம் பெற்று ஆத்மா ஆத்மாவுடன் (ஜீவாத்மா பரமாத்மாவுடன்) இணைவது என்பது ராசலீலை! இருப்பதிலேயே பெரும் விளையாட்டு ராசலீலை!

உடல் எனும் Gross Matter மீது மட்டுமே அதீத ஈடுபாடு கொண்டு இருக்கும் சாதாரண Dormant Consiousness இருக்கும் வரை ஆத்ம தரிசனம் கிடைக்குமா... கருப்பண்ணசாமியின் / கிருஷ்ணரின் ராசலீலைதான் மெய்யாக என்ன என்று விளங்குமா?

பால், பருப்பு என்று உணவுப்பொருள் பெயர் சொல்லும் போது பாலியல் எண்ணம் வருகிறதா? இல்லைதானே

பால், பருப்பு உண்டு பருத்த முலைக்காம்பில் பால் பெருக்கெடுத்தது எனும்போது பாலியல் எண்ணம் எழுவது ஏன்?

Restricted Consiousness உடலுக்கு அடிமையாக இருப்பதால் உடலின் ஹார்மோன் செய்யும் சூப்பர் இம்போஸ் செய்யப்படுவதால்...

நம்மாட்கள் உடலைத்தாண்டி உலகுக்கே உளவியல் சொன்னவர்கள்.
Subtler controls Grosser என்று.

சத்வ, ரஜோ, தமோ குணம் உளவியலாக மூன்று கேட்டகிரியாக பிரித்தார்கள்.

உடல் அளவிலேயெ இருப்பது தமோ குணம். மனதைக் கொண்டு உடலை நெறிப்படுத்த தியானம், ஜெபம், இறைவழிபாடு, மந்திர உச்சாடனம் என்று சடங்குகள் ஏற்படுத்தினார்கள்.


நமது தொன்மையான சிறப்பு மிக்க சனாதன பாரம்பரியம் பற்றி விளக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி!

பங்காளி... said...

ஹரிஹரன்...

ஏனிந்த கொலைவெறி...ஹி..ஹி..

நெருடும் விதயங்களாக சுட்டிகாட்டும் அளவிலேயே ராதை-கிருஷ்ணர் தொடர்பினை அணுகியிருக்கிறேன்....அவ்வளவே...

கிருஷ்ணரை குறை கூறுவதோ அல்லது இழிவுபடுத்துவதோ பதிவின் நோக்கமன்று....அதே நேரத்தில் இல்லாத ஒன்றையும் எழுதவில்லை....

மற்றபடி எங்களின் காவல் தெய்வமாய் இருந்த கருப்பன்னசாமியால் கவரப்பட குறிப்பிட்ட ஒரு சாரார் ஹைஜாக் பண்ணி அவர் மீது தங்களின் மொழியையும் ஆன்ம விசாரஙகளை பூசி மெழுகிவிட்டனர் என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்கிறேன்.....

ஹி..ஹி...கோவிக்காதீங்க ஹரி...

ஆடுமாடு said...

ரொம்ப லேட்டாத்தான் படிச்சேன். கண்ணன் பற்றி வரலாற்றுச் சான்றுகளோடு நிறைய கதைகள் இருக்கிறது. இருந்தாலும் இது புது விஷயமாக இருக்கிறது. ஒரு கூத்தைக் கேளுங்க. கிருஷ்ணன் மதுரைக்காரர்தான்னு ஒருத்தர் பி.எச்.டி. பண்ணப் போறாராம்.
ஆடுமாடு

பங்காளி... said...

அந்த மதுரைக்காரர் ஆடுமாடுன்ற பேர்ல பதிவெல்லாம் எளுதறதா கேள்விப் பட்டோமே உண்மையா...!

குமரன் (Kumaran) said...

பங்காளி. கண்ணன் கருப்பனாக இருப்பதாலும் கண்ணனும் பலராமனும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் நான்கு கடவுளர்களில் இருவராக இருப்பதாலும் (மற்ற இருவர் சிவபெருமானும் முருகனும்) கண்ணன் தமிழ்க்கடவுளாகவே இருந்து பின்னர் வடமதுரையில் பிறந்தவனாக மாற்றம் பெற்றான் என்றே நானும் நினைக்கிறேன். சிலப்பதிகாரக் காலத்திலேயே அவன் வடமதுரை மைந்தன் ஆகிவிட்டான். ஆனால் வடக்கிலிருந்து அவன் வராமல் தெற்கிலிருந்து அங்கே சென்றிருப்பான் என்று நினைக்கிறேன் - முருகன் இங்கிருந்து வடக்கே கங்கையில் சரவணப் பொய்கையில் போய் பிறந்ததைப் போல். ஆனால் தகுந்த தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் இது அனுமானம் என்ற அளவிலேயே இருக்கிறது.

கருப்பண்ண சாமியும் கண்ணனும் ஒரே கடவுளின் இரு வெளிப்பாடுகள் என்ற கருத்திலும் ஒப்புதல் உண்டு. நீங்கள் சொல்லும் புத்தகத்தைப் படித்ததில்லை. ஆனால் கருப்பண்ண சாமியைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும் ஒரு எண்ணம் அது.

குமரி மைந்தன் அவர்களின் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அவருடைய கருத்துகள் புதுமையாகவும் நிலைநாட்டப்பட்டக் கருத்துகளைக் கட்டுடைப்பவையாகவும் இருக்கிறது. படிக்கும் போது பிரமிப்பும் குழப்பமும் மாறி மாறி ஏற்படுகிறது. தகுந்த தரவுகள் எல்லா நேரங்களிலும் தரப்படுவதில்லை. அதனால் அவை அவர் கருத்து/அனுமானம் மட்டுமா அல்லது தரவுகள் ஏதேனும் உண்டா என்ற கேள்விகள் அடிக்கடி தோன்றும்.

அவர் சொல்வது போல் துவரைப்பதியில் வாழ்ந்தவர்கள் வடக்கே சென்ற போது துவாரகையில் வாழ்ந்தார்கள் என்பது உண்மையானால் அவர்களால் கண்ணனின் கதை வடக்கே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அவன் வடமதுரையில் பிறக்காமல் குமரிக்கண்டத்தில் தென்மதுரையில் பிறந்தவனாக இருக்கலாம். துவரைப்பதியை ஆண்டவனாக இருந்து துவாரகையை ஆண்டவனாகச் சொல்லப்பட்டிருக்கலாம்.

அவர் காட்டும் புறநானூற்றுச் செய்யுளில் வரும் 'பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்' என்பதற்குப் பொருளாக சேரன் உதியஞ்சேரலாதன் மகாபாரதப் போரில் இருபுறப் படைக்கும் உணவு வழங்கியதாகத் தான் இதுவரை சொல்லியிருக்கிறார்கள் அறிஞர்கள். நூற்றுவர்க்கும் இந்தச் சேரன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பது புதிய பொருள். மேலோட்டமாகப் பார்க்கும் போது பொருந்தி வருவது போல் தோன்றினாலும் 'வரையாது - அளவில்லாமல்/குறைவின்றி' என்ற சொல் கேள்வியை எழுப்புகிறது. முன்னோர் கடனை அளவில்லாமல் செய்தான் என்று ஏன் சொல்லவேண்டும்? நூற்றுவரின் தாயாதிகள் ஐவர் இருக்க இவன் ஏன் முன்னோர் கடன் ஆற்ற வேண்டும்? பல தொடர் கேள்விகள் எழுகின்றன. ஆனாலும் அவர் சொல்வது சுவையாக இருக்கிறது என்பதென்னவோ உண்மை.

துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள 'இராமர்' கோவிலுக்கு 'ஜனமேஜயன்' 'கி.மு.3012ல்' மானியம் வழங்கினான் என்று செப்புத் தகடு இருக்கிறதா? படிக்கச் சுவையாக இருக்கிறதே. எல்லா பதிவுகளையும் முதலாளாகப் படிக்கும் நண்பர் இந்த இடுகையைப் படிக்கவில்லையா? படித்தும் இதனைக் கவனிக்காமல் விட்டாரா? :-)

இந்தச் செப்புத் தகடு தரும் செய்தியைப் பற்றி மேல்விவரம் கிடைக்குமா? எங்கிருந்து இந்தச் செய்தியை எடுத்து எழுதினீர்கள்?

இராதை கண்ணனின் அத்தை முறை என்பது புதிய தகவல். அவள் ஏற்கனவே மணமானவள் என்பதைப் படித்திருக்கிறேன். தமிழ் இலக்கியங்களிலோ வடமொழி இலக்கியங்களில் மகாபாரத பாகவதங்களிலோ இராதையைப் பற்றிய குறிப்பு இல்லை. பாகவதம் தான் கண்ணனின் கதையை முதன்முறையாக முழுமையாகவும் விரித்தும் சொன்னது. வங்காளத்தில் தான் இராதையின் கதை வருகிறது. அது பின்னர் கிருஷ்ண பக்தி இருக்கும் இடங்களுக்கெல்லாம் பரவிவிட்டது.

piravipayan said...

ஆரியர்களை விடுத்தது தமிழ்/திராவிட கடவுள் யார் நம்முடைய திராவிட முறை கடவுளை வழிப்படும் முறை என்ன ? கடவுளை கும்பிட இடையில் பார்பனன் எதற்கு ?
யார் திராவிட கடவுள் எதாவது ஆராயிச்சி உள்ளதா?

திராவிட கடவுள் - ஆரியகடவுள் இரண்டும் வேறு வேறா ?

முடிந்தால் ஆதாரபூர்வமாக பதில் அளிக்கவும்