Thursday, November 30, 2006

அப்பாவின் அறுவைசிகிச்சை...

இப்பதிவினை சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனையொன்றின் அறையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்து நாட்களாய் இங்கேதான் வாசம்.....

மதுரையிலிருந்து, கடந்த 22ம் தேதி இரவு அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனே வரவேண்டி தகவல்.......கலவரமாய் அடுத்தநாள் காலை 7மணிக்கு பாரமவுண்டில் பறந்தேன்...எவ்வளவோ முயன்றும் குட்டைபாவாடை பணிப்பெண்களை ரசிக்கிற மனநிலை இல்லாமல் மதுரையில் இறங்கினேன்.

அதற்குள் மலேரியா என தீர்மாணித்து அதற்கான சிகிச்சைகள் ஆரம்பித்திருந்தனர்.....இரண்டு நாட்களுக்கு பின்னரும் எந்த முன்னேற்றமுமில்லாமல்....டெங்குவாய் இருக்குமென ஹேஷ்யங்கள்....அப்பா என் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாய் நினைவிழக்கத் துவங்கியிருந்தார்....இனி இவர்களை நம்பி பயனில்லை என முடிவு செய்து உடனடியாய் விமானத்தில் சென்னைக்கு கொண்டுவந்தேன்....

சென்னை வந்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு பித்தப்பையில் இரண்டு பெரிய கல் இருப்பது கண்டறியப்பட்டது.உடனடியாய் அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பிருப்பதாய் சொன்னவர்கள்,இதயம் அறுவை சிகிச்சையை தாங்குமா என்கிற சந்தேகத்தை எழுப்பி என்னை தடுமாற வைத்தனர்.

ஜீரண மண்டலங்களுக்கு மட்டுமே சிறப்பு சிகிச்சைதரும் இம்மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்களுக்கு அவர்களால் எதுவும் செய்ய என் தந்தையின் உடல்நிலை இடம் தரவில்லை.இரண்டு நாள் மரணப்போராட்டத்திற்குப் பின்னர் நேற்று இரவு என் தந்தையாருக்கு அவரது பித்தப்பையும்(Gal bladder), கற்களும் அகற்றப்பட்டு தற்சமயம் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறார்.

கடந்தவாரம் வரை எனக்கு நமது ஜீரணமண்டலம் பற்றிய பெரிதாய் ஆர்வமோ,அறிவோ கிடையாது.ஆனால் இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நானறிந்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....

உணவுக்குழாயில் துவங்கி இரைப்பை, சிறுகுடல்,பெருங்குடல்,கல்லீரல்(Liver),கனையம்(Pancreas)முதலிய உறுப்புகள் அடங்கிய பகுதியைத்தான் ஜீரணமண்டலம் என்கிறோம். இந்த உறுப்புகள் சுரக்கும் ஜீரண நொதிகள்(ENZYMES),அமிலம்(Acid),பித்த நீர்(Bile),முதலியன நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு உதவுகிறது.

இந்த ஜீரண மண்டலத்தை தாக்கும் வியாதிகளாவன...நெஞ்செரிச்சல்(Esophagitis), அதிக அமிலம் சுரத்தல், அஜீரணம், குடல்புண், பித்தபை கற்கள், மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம்(Hepatities),கல்லீரல் சுருக்கம்(Cirrhosis), இரத்த வாந்தி போன்ற கல்லீரல் வியாதிகள், கனைய வியாதிகள், ஜீரணமண்டல புற்று நோய்கள், மூலவியாதி, ஆசன வாய் வெடிப்பு(Anal Fissure).

வயிற்றுவலி, வாந்தி,நெஞ்செரிச்சல், பசியின்மை,வாயுத்தொல்லை,மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு, எடைகுறைவு,மஞ்சள்காமாலை,விழுங்குவதில் சிரமம்,வயிறு மற்றும் கால்வீக்கம், வாந்தி மலத்தில் ரத்தம் வெளியேறுதல் முதலியன ஜீரணமண்டல வியாதிகளின் அபாய அறிகுறிகள்....
எனவே...இப்பதிவினை கடந்து செல்லும் நணபர்கள் ஜீரணமண்டலம் பற்றிய விழிப்புணர்வு அடைந்து நலமுடம் வாழ வாழ்த்துகிறேன்.

9 Comments:

Sri Rangan said...

தங்கள் தந்தையார் மிக விரைவில் குணமடைந்து,தங்களோடு அன்பாகப் பேசி மகிழவேண்டுமென வாழ்த்துகிறேன்!

எல்லாம் நன்மைக்கே!,நலம் பெறுவார்,கவலைவேண்டாம்!

நல்லதே நடக்கும்.

நன்மனம் said...

தங்கள் தந்தை விரைவாக குணமடைய பிரார்திக்கிறேன்.

தகவல்களுக்கு நன்றி.

Chandravathanaa said...

பங்காளி,
உங்கள் அப்பா குணமடைந்து நல்லபடி வீடு வந்து சேரப் பிரார்த்திக்கிறேன்.

என் அப்பா மருத்துவம் சதி செய்ததால், மரணித்த நாள் இன்று. அதனாலோ என்னவோ உங்கள் பதிவு என்னைக் கலங்க வைத்து விட்டது.

மங்கை said...

இப்ப எப்படி இருக்கார் அப்பா...

அவர் விரவாக குணமடைய
இறைவணை பிரார்திக்குறேன்....

We The People said...

பங்காளி,

உங்கள் தந்தை விரைவாக குணமடைய பிரார்திக்கிறேன்.

ஜீரண மண்டலங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

அன்புடன்,

ஜெய்

மதுரையம்பதி said...

உங்கள் தந்தை விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....

Thekkikattan said...

இந்த சமயத்திலும் இப்படி ஒரு பதிவு போட வேண்டுமென்று நினைத்து போட்டும் விட்டீர்கள், நிறைய செய்திகளுடன், நன்றி!

அப்பாவின் உடல் நலம் குணமடைய பிரார்த்திப்போம்.

மதி கந்தசாமி (Mathy) said...

பங்காளி,

உங்கள் தந்தை விரைவாக குணமடைய பிரார்திக்கிறேன்.

பங்காளி... said...

ஒவ்வொரு நண்பரின் அன்பையும்,ஆறுதலையும்,அருகாமையும் இந்த நேரத்தில் எனக்குள் எத்தனை நம்பிக்கையையும் மனநிம்மதியையும் தருகிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல இயலாது....

குடும்பத்திற்குள் நன்றி சொல்வதும் எதிர்பார்ப்பதும் சரியாகுமா... தெரியவில்லை இருந்தாலும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி...